Thursday, June 4, 2015

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்


ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்

இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒலிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.

அன்புள்ள மகனுக்கு,

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:

1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .

கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:

1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.

2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.

3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.

4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.

5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக.

7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.

8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!

9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.

அன்புடன் ,

உன் அப்பா.
??????????????????
??????????????????

Wednesday, June 3, 2015

ரயிலில் கிடைத்த பாடம்...பளார் பதிவு...


ரயிலில் கிடைத்த பாடம்...பளார் பதிவு...

சமீபத்தில் இணையத்தில் நாம் கண்ட ‘பளார்’ பதிவு இது.

நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்தது. பதிவை எழுதியவரை தொடர்புகொண்டு உரிய அனுமதி பெற்று நமது தளத்தில் அளித்திருக்கிறோம்.

படியுங்கள்… நமது எதிர்மறை எண்ணங்களுக்கு இந்த பதிவு விடையாக அமைந்தால் நல்லதே...

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது.

இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

வழக்கமாக இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள் தருவதும், புகை பிடிக்க பேன்ட்ரி கார் செல்வதும் எனக்கு பழக்கமாகிபோனது.

அப்படி புகைப்பிடிக்க சென்ற போதுதான் அவரை பார்த்தேன்.

ஆனந்தம் நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைக்காத பனியன் ,கிருதா வழியாக வழியும் எண்ணை, கால்சட்டை தெரியுமளவிற்கு தூக்கிகட்டிய லுங்கி , சரியாக சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள்.

இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோணியது , வேறு எங்கே , மளிகைக்கடையில் மடித்து கொடுக்கும் மக்கள் இதே போல் தானே இருக்கிறார்கள் .

சரி , இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை , இந்த கோலத்தில் இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏ சி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை ,

ஆனால் நெடு நேரமாக இங்கு தான் இருக்கிறார் என்ற போது ஒரு சிறிய சந்தேகம் எட்டி பார்த்தது . இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் கதவருகே நின்றுகொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன் , இன்னும் அந்த ஓட்ட வைத்த புன்னகை அவரிடமிருந்தது .

ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது அவரிடம் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது , அப்போதுதான் கவனித்தேன் அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை ,

எனக்கு இப்போது தெளிவாக புரிந்தது , குப்பை பொறுக்கும் ஆள் தான் அவர் . உடன் ஒரு சின்ன கோபமும் வந்தது , இப்படி இவர்களை ஏ சி பெட்டிகளில் அனுமதித்தால் , ஏதேனும் களவு போய் விட வாய்ப்புகள் அதிகமாயிற்றே , வரட்டும் அந்த டி டி ஆர் என்ற நினைத்துக்கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன் .

இது எனக்கு தேவையில்லாத வேலை தான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த அந்த அம்மாஞ்சி களையும், கண்களில் இருந்த சிநேக பார்வையும் எண்ணை அவரிடம் பேச சொல்லி தூண்டியது.

“என்னங்க ! ஈரோட்டுல இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன், இங்க இறங்கி சில்ர வேலைகளே முடிச்சிறனும்!”

“ஒ ,அப்ப பாம்பே வர்றீங்களா !”

“ஆமா சார் ! நீங்க பம்பாய் தான் போறீகளா !” பாமரத்தனமாக கேட்டார்

“ஆமாங்க !” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில், நிலையத்தை அடைந்தது உடன் அவர் இறங்கி கொண்டார் , சாக்கு மூட்டையை தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் இன்னொரு முனையை பிடித்துக்கொண்டார் .

அது அவர் தோளில் தொய்வாகவும் குப்பைகளை போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும் இருந்தது. சட சட வென பொறுக்க ஆரம்பித்தார்.

ரயில் நின்ற பத்து நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி கிளம்பியது.

இம்முறை நான் கேட்டுவிடுவது என்று தீர்மானித்து கொண்டேன் . இம்மாதிரி கேள்விகளை ஆரம்பிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது...

“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல ”

“இல்ல சார் , அங்க இருந்த நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று கொஞ்சம் படபடப்புடன் பேசினார்

“சாரு பாங்க்ல வேல செய்திகளோ ” கேள்வி கேட்டார் சற்று எதிர்பார்ப்புடன்,

“இல்ல ,ஏன் கேக்குறீங்க ” என்றேன்

“ஒரு சின்ன விஷயம் கேக்கணும், இந்த டாக்ஸ் எப்பிடி கட்டுறதுன்னு கேக்கலாம்னு தான் கேட்டேன் ”

சிரிப்பு வந்தது எனக்கு...

“டாக்ஸ் கட்டுறதுக்கு ஆடிட்டர பாக்கணும் , பேங்க்ல வேலை செய்றவங்களுக்கும் டாக்ஸ்க்கும் சம்பந்தமில்ல” என்ன ஒரு அப்பாவியாக இருக்கிறார் ,

இது தான் இந்திய மக்களின் நிலைமை என்ற அளவிற்கு என் சிந்தனை சென்று கொண்டிருந்த போது தான் என் ஆறாம் அறிவு டக் என விழித்து அந்த சந்தேகத்தை இடி போல் இறக்கியது.

“குப்பை பொறுக்கும் ஒருவன் எதற்காக டாக்ஸ் கட்டவேண்டும் என்கிறான்” என்ற எண்ணம் தான் முன்னதாக நான் ஏய்த ஏளனத்தில் கொஞ்சம் வருத்தமாகி அவர் நகர்ந்து கொண்டிருந்த வேளையில் நான் அழைத்தேன்.

“அண்ணே, ஒரு நிமிஷம்” என் வாய் தானா அவரை அண்ணா என்றது. எல்லாம் காசு பண்ணும் இல்லை இல்லை டாக்ஸ் பண்ணும் வேலை .

திரும்ப அருகில் வந்தவரிடம் “யாருக்கு டாக்ஸ் கட்டனும்” என்றேன்

“எனக்குதான் சார் , அதில்லாம நான் பேங்க் பத்தி கேட்டது டாக்ஸ் கொறைக்க என்ன முதலீடு செய்யலாம்னு கேக்கதான் சார் ” என்று சொல்லும்போதே என் தலை சுற்ற ஆரம்பித்தது ,

ரயில் இரைச்சலின் நடுவேயும் என் உள் மணம் என்னை அசிங்கமாக திட்டியது தெளிவாக கேட்டது .இந்த நேரத்தில் நான் என்ன பேசினாலும் உளறுவது போலத்தான் இருக்கும் ,எனவே சற்று நேரம் மௌனம் சாதித்தேன்

“அண்ணே , டாக்ஸ் கட்டுற அளவுக்கு என்ன தொழில் பண்றீங்க ” அவர் செய்யும் வேலையை இப்போதுதான் பார்த்தேன் , என்றாலும் குப்பை பொறுக்குற நீங்க ஏன் டாக்ஸ் கட்டுறீங்க என்று கேட்பது என் உள் மன பொறாமையையும் வஞ்சத்தையும் காட்டிவிடும் என்று அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் .

அண்ணன் ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார், வேலை என்னவென்றால் கன்னியா குமரியில் இருந்து ரயிலில் ஏறி , முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும் , வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும்.

முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள் , எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள் .

இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது...

அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம் (ரூ 4,000), எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம் (ரூ 32,000), மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் (ரூ 2,40,000) ,செலவு நாப்பதாயிரம் (- ரூ 40,000)) , வருமானம் இரண்டு லட்சம் (ரூ 2,00,000) , வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் (ரூ 24,00,000) .

இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும் , இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன .
மலைத்து நின்றேன்.

கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன்.

ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து , கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார்.

அன்று நான் இருந்த ஏ சி பெட்டி கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது.

எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

“சார் ! எனக்கு தெரிஞ்ச நண்பரோட போன் நம்பர் இது ,இவரு முதலீடு செய்றத பத்தி உங்களுக்கு உதவி செய்வாரு சார் ” என்று கூறி விடைபெற்றேன்.

இம்முறை என்னையும் அறியாமல் அவரை சார் என்று அழைத்தேன்.
=================================================================
பதிவை படித்ததும் அதை உடனடியாக நமது வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினோம். பதிவாசிரியர் திரு.பார்த்தசாரதிக்கு மின்னஞ்சல் செய்தோம். இரண்டு நாட்களில் நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்டார். முதலில் அவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டோம். பின்னர் மேற்படி பதிவை நமது தளத்தில் வெளியிட அனுமதி கேட்டோம். மகிழ்ச்சியுடன் இசைந்தார்.

மேற்படி பதிவு உணர்த்தும் நீதியை பற்றி குறிப்பிடவேண்டுமானால்…

ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை.

ஒரு தொழிலில் இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.

மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்

#TrueStoryInspired #IndianRailJourney #TamilShortStories #தமிழ்-சிறுகதைகள் #உண்மை-சம்பவம்-அடிப்படியில்

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை."


"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை." என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"வருத்தப்படாதே,

என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.

"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.

வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.

அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.

இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.

இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.

ஆனால் ஆச்சர்யம்!

பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம்.

அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,

பொறுமை இழக்கவில்லை.

ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.

இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.

இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.

"எப்படி இவ்வளவு பொறுமையாய்,

யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"

அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,

"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.

வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்

குப்பைகளையெல்லாம் என் மனதில்

சேர்த்துக்கொள்ளவில்லை.

அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு

பதில் சொல்லிக்கொண்டிருந்தால்

நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய

வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.

ஆமாம்,

நண்பர்களே,

நமக்கு இலக்குதான்

முக்கியமே தவிர

இடையில் வரும்,

கொஞ்ச நஞ்ச

இடைஞ்சல்கள் அல்ல..

#Mindfulness, #TamilShortStories, #இலக்கு, #தமிழ்-சிறுகதைகள்

கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை? (கண்ணனின் அற்புத விளக்கம்)


கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை?
(கண்ணனின் அற்புத விளக்கம்)
***************************
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.

ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்

.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.

நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.

அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.

தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.

மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?

ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்த விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;

என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.

பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..

. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம்
கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''
புன்னகைத்தான் கண்ணன்

. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.

அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக
முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை
????????????????????

"நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" - ஒரு எச்சரிக்கை - ரிப்போர்ட்

"நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" 
ஒரு எச்சரிக்கை - ரிப்போர்ட்

2 நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார்...!
அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. 

இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. 

இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்?

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.
அனைத்து நூடுல்ஸ்களிலும்அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

100 கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.
ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. 

ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.
ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை.

கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.
நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

நண்பர்களே! ஒரு நடிகையின் போட்டோவை அதிகம் ஷேர் செய்யறோம் .தயவு செய்து இதை அதிகம் பேருக்கு ஷேர் செய்யுங்கள்...!
உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்!

#JunkFood #UnhealthyFood #ஆறோக்கியமற்ற-உணவு