இந்த உயிர் வாழ்க்கை என்பது கனவைப் போன்று பொய்யானதாக இருக்கின்றது. தோன்றுவதும் தெரியாது, கலைவதுவும் தெரியாது, விழிக்கும் போது(அடுத்த பிறப்பு) மறந்தும் போகும். ஆனால் ஒன்று மட்டும் உண்மையாக இருக்கிறது. எந்த நேரத்திலும் இந்த உலகை விட்டு போய் விடுவோம் என்று கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிகிறது என்பதே அது. இப்படி நிச்சயமற்ற நிலையில் வாழும் மனிதனோ தான் ஏதோ ஆயிரம் ஆண்டுகள் வாழப் போவது போல எண்ணி இறுமாந்து , தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள எத்தனையோ பேருக்கு தீங்கிழைக்கிறான், வஞ்சித்து ஏமாற்றுகிறான், அடுத்துக் கெடுக்கிறான்.
"இருப்பதுபொய் போவதுமெய்
யென்றெண்ணி நெஞ்சே !
ஒருத்தருக்குந் தீங்கினை
யுன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்குந்தான் !"
என்கிறார் பட்டினத்தார்.
இவ்வாறு பிறருக்குத் தீங்கிழைத்து பெருஞ் செல்வத்தைக் குவிக்கும் மனிதனின் நிலை என்ன ?
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெறும் கையனாக, தன்னந்தனியாக பரலோகம் போய்விடுகிறான். இதைத்தான் பட்டினத்தார் நக்கலாகப் பாடுகிறார். தனது பருத்த தொந்தி மேலும் பருக்க வேண்டும் என்ற பேராசையினால் பிறருக்கு தீங்கிழைக்கும் மனிதனே, நீ இந்தத் தொந்தி உனக்கே சொந்தம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயா ? அடப் பைத்தியக்காரா அங்கே நாய்களும், நரிகளும், கழுகுகளும், பேய்களும் இந்தத் தொந்தி எங்களுக்கே சொந்தம் என்று காத்துக் கொண்டிருப்பதை நீ அறியாமலிருக்கிறாய் என்கிறார்.
எந்த ஒரு உயிரினத்துக்கு யார் தீங்கிழைத்தாலும், அது அந்த உயிரினத்துக்கு மட்டுமல்ல, இறைவனுக்கே செய்யும் தீங்காகும். உலக ஜீவராசிகள் அனைத்திலும் இறைவன் குடி கொண்டிருக்கிறான் என்பதே நம் தேசத்தின் ஆன்மிகத் தத்துவம். இதையே அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன. இந்த சமநோக்கு மனப்பான்மை மனிதனிடம் வளர ஆன்மிகம் மட்டுமே சிறந்த வழியாகும். மற்ற எந்த உபாயமும்யில்லை என்றே சொல்லலாம்.
பட்டினத்தார் காலத்தில் தாசிக் குலப் பெண்கள் தங்கள் ஆன்மிகப் பணிகளை மறந்து தவறான வழிகளில் செல்வது கண்டு சில பாடல்களில் அவர் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை கையாண்டிருப்பார். எனினும், அவர் பெண்கள் மீது மரியாதை கொண்டவரே என்பது அவரின் சில பாடல்களில் வெளிப்படுவதைக் காணலாம். உறவுகள் நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை குறிந்து அவர் பாடியுள்ள பாடல்கள் இருபாலாருக்கும் பொருந்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதுவும் தாய்மையின் மீதும், தாயார் மீதும் அளவு கடந்த பக்தியும், நன்றி உணர்வும் கொண்டவர் என்பது அவர் பாடல்களிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். அவர் தாயாரின் இறுதி சடங்கின் பொழுது பாடிய பாடல்கள் கல் நெஞ்சையும் கலங்க வைக்கும் வல்லமை கொண்டவை. அன்னையர் தினம் வந்த நிலையில் அவர் பாடல்கள் என் மனதில் ஒலித்தன. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பட்டினத்தார் துறவு மேற்கொண்டு ஊர் ஊராக அலைந்து திரிந்து கொண்டிருந்த பொழுது அவருடைய தாயார் மரணமடைந்தார். அவருடைய அந்திம காலத்தில் எங்கிருந்தாலும் வருவேன் என்று அவர் தன் தாயாருக்கு உறுதி மொழி அளித்திருந்த படியால் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துப் பாடல்களைப் பாடினார். சிதை பற்றி எரிந்தது. தாய்மையைப் போற்றும் அந்தப் பாடல்களுக்கு இணையான பாடல்கள் உலகில் வேறு கிடையாது.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி ?
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்துத்
தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் ?
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன் ?
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டு வேன் ?
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு ?
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு ?
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே !
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.
சக மனிதனோ, பிராணியோ நமக்குத் துன்பம் தந்தால், அது நம்முடைய செயலின் பிரதிபலிப்புகளே என்று நாம் உணர வேண்டும். அவர்களோடு பகைமை பாராட்டக் கூடாது. நம் மீது நாம் அன்பு செலுத்துவது போல அவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும். தீங்கு செய்யக் கூடாது. இதை கீதையும் சொல்கிறது, பைபிளும் சொல்கிறது. வள்ளலார் சொல்கிறார்.... ''அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும்.'' என்ன ஒரு உயர்வான சிந்தனை பாருங்கள். காசு, பணம், போகம் இதெல்லாம் கேட்கவில்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மனதைக் கேட்கிறார். இந்த மனப்பான்மையால் விளையும் நன்மை என்ன ? அதாவது இன்பம், துன்பம் என்றெல்லாம் தனித்தனியாக எதுவும் இல்லை. நம் மனப்பான்மையைப் பொருத்தே இன்பமும் துன்பமும் நம் உணர்வை எட்டுகின்றன. உயர்வான மனப்பக்குவத்தை, எண்ணங்களைப் பெற்றுவிட்டோமானால், இது வரை துன்பம் என்று எண்ணிக் கொண்டிருந்த பல விஷயங்களில் இருந்தும் இன்பத்தைப் பெற முடியும். அதாவது இன்பமாக உணர முடியும். ஆனால் இங்கே நாம் அடையும் இன்பங்கள் எல்லாம் ஒரு வரைமுறைக்கு உட்பட்டவை. இவை அதிகமானால் துன்பமாகி விடும். ஆனால் எல்லையே இல்லாமல் விரிந்து கொண்டே போகும் துன்பமே இல்லாத பேரின்ப நிலையை அடைய வேண்டுமென்றால், மனம் முழுவதும் அன்பு மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். அதுவே ஒளியாகவும், வழியாகவும் நின்று நம்மை மேன்மையுறச் செய்யும். இந்த மனப்பக்குவத்தின் மறுபெயரே ஆத்ம ஞானம்.
No comments:
Post a Comment