"சார், எனக்கு மறதி அதிகமாகி கொண்டே வருகிறது. நாள் முழுவதும் கஷ்டப்பட்டு பாடங்களைப் படிக்கிறேன். வீட்டில் படித்ததை எல்லாம் திரும்பவும் சொல்லிப் பார்த்துக்கொள்ளும் போதோ அல்லது புத்தகத்தை மூடிவிட்டு எழுதிப் பார்க்கும்போதோ, தடை இல்லாமல் சுலபமாக செய்ய முடிகிறது. ஆனால், தேர்வு எழுதும்போது எல்லாமே மறந்து போய்விடுகிறது. இந்தப் பிரச்னையை சமாளிக்க ஏதாவது வழி சொல்லுங்கள்" என்றார் அந்த மாணவர்.
அவரிடம், "சிறு வயதில் மரத்தால் ஆன ஆடுகுதிரையில் ஆடி இருக்கிறீர்களா?" என்று கேட்டேன்
"பச்சை கலர் பெயின்ட் அடித்த ஆடுகுதிரை ஒன்றை எங்கள் தாத்தா வாங்கிக் கொடுத்தார். அதில் உட்கார்ந்து நாள் முழுவதும் ஆடிக்கொண்டு, டெல்லி, பம்பாய்,கல்கத்தா- வுக்கு எல்லாம் கற்பனையாக போயிருக்கிறேன்." என்றார்.
கற்பனையாக பல இடங்களுக்கு அழைத்து சென்ற ஆடுகுதிரை, உங்களை உண்மையாகவே எங்கும் அழைத்து செல்லவில்லை.
கவலை என்பதும் ஆடுகுதிரை மாதிரிதான். இருக்கும் இடத்திலேயே நம்மை உட்காரவைத்துவிட்டு எங்கோ அழைத்து செல்வதைப் போன்ற போலியான எண்ணத்தை உருவாகிவிடும். அதில் ஆடி ஆடி உங்கள் நேரத்தை வீணாக்கலாமா? முதலில் " ஐயோ, படித்ததை எல்லாம் மறந்துவிடுவோமா ?" என்று கவலை படுவதை விட்டொழியுங்கள்.
பயமும் கவலையும் நமது திறமைகளை வற்ற வைத்து விடும் சக்தி கொண்டவை
இரண்டே அடி அகலமுள்ள ஒரு நடைபாதையில் உங்களை நடக்க சொன்னால், அதில் நடந்து செல்வதில் எந்தவிதப் பிரச்னையும் இருக்காது அல்லவா? சொல்லப் போனால் உங்களால் அதில் ஓடவும் முடியும்.
ஆனால், அந்த நடைபாதையே இருநூறு அடி உயரமான ஒரு சுவரின் மேற்பரப்பாக வைத்துக் கொள்வோம். இப்போது உங்களால் அதில் நடக்க முடியுமா? "எங்கே கீழே விழுந்து விடுவோமோ?" என்ற கவலையும் பயமும் உங்களை ஓரடி எடுத்து வைப்பதற்குள் வெலவெலத்துப் போகவைத்துவிடும்.
தரையில் இயல்பாக நடந்து செல்வதைப் போன்று நீங்கள் படித்த பாடங்களை வீட்டில் நன்றாக நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால், உயரத்தில் நடக்கும்போது "விழுந்து விடுவோமோ!" என்ற எண்ணம் வருவதைப் போல, தேர்வுக் கூடத்தில் "மறந்து விடுவோமோ" என்ற பயமும், கவலையும், செயல் இழக்க செய்கின்றன.
இந்த கவலையையும் பயத்தையும் வெற்றி கொண்டால் மறதிக்கு தாராளமாக ஒரு குட்பை சொல்ல முடியும்
No comments:
Post a Comment